ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால், காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் அந்த மனுவில் முறையிடப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமம் பெறாத, பதிவு செய்யாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய ஏற்கெனவே தடை விதித்தது. மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டம், மத்திய அரசின் சட்டம் என்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே இருப்பதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிகளை வகுக்க உத்தரவிட்டு, அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கும் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.


இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கான புதிய விதிகளை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கி பிறக்கப்பிட்ட உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து ஆணையிட்டனர்.