திமுக சார்பில் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வருகிற 12- ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-


மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு கொண்டு வந்த “நீட்” தேர்வால் இன்றைக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பாதிக்கப்பட்டு, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. அதிமுக அரசோ அது பற்றியெல்லாம் பேசுவதற்கோ, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ நேரமின்றி அவர்களின் உள்கட்சி சண்டையிலும், ஊழல் போட்டியிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


“நீட்” தேர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பல்வேறு குழப்பங்களை சந்தித்துள்ள மாணவர்களும், பெற்றோரும் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டு களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகி விட்ட வேதனைக் கதை தொடர்கிறது. தமிழக சட்ட மன்றத்தில் எதிரொலித்த தமிழுணர்வுக்கு மத்தியில் உள்ள அரசு இதுவரை மதிப்பளிக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக அமைந்திருக்கிறது.


இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தாய்கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் அவர்கள் கடந்த 4.7.2017அன்று திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, “12.7.2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவது; தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு கோடி அஞ்சல் அட்டைகள், மின்னஞ்சல்கள் மாணவர்கள் மூலம் அனுப்புவது” என்று மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார்கள்.


சமூக நீதி, மாநில உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த சீர்மிகு  முயற்சி யில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு அக்கறையுடனும், ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்று கழக மாணவர் மற்றும் இளைஞரணி யினரை கேட்டுக் கொள்கிறேன். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு ஒரு கோடி அஞ்சலட்டைகள், மின்னஞ்சல்கள் (மாதிரி இணைக்கப்பட்டுள்ளது) அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், வருகின்ற 12 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பேரார்வத்துடன் பங்கேற்று தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசுக்கு உணர்த்தி வெற்றி கரமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.