நீட் விவகாரம்: திமுக இன்று மனிதச் சங்கிலி போராட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறி, அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத்தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மாலை 4 முதல் 5 மணி வரை திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சேலத்தில் நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.