தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.


அப்பொழுது தமிழகம் அவசர சட்டம் கொண்டு வர உள்ளதால், தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப் பட்டது. எனவே சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வுக்கான மருத்துவ கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டமானது எந்த வகையிலும் மாணவர்களின் நலனுக்கு விரோதமாக அமைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில், நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனக் கூறப்பட்டது.


இதனையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், மேலும் வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை முடிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் நாளை மதியம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மேலும் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.