நீட் விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவக் கல்வியில் சேருவதற்கு கட்டாயமாக கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாமல், மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக அரசு. எண்ணற்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறித்துவிட்டது அதிமுக அரசு. 


அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது அம்பலமாகி விட்டது.


‘நீட் தேர்வு’ விவகாரத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் இணைந்து நடத்திய கண்துடைப்பு நாடகத்தின் இறுதிக்காட்சி, இன்றைக்குத் தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது. “நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டம் நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது”, என்று முதலில் உச்சநீதிமன்றத்தில் கூறிவிட்டு, இன்றைக்கு உச்சநீதிமன்றம் முன்பு அப்படியே மத்திய அரசு அந்தர் பல்டி அடித்திருப்பது மர்மமாக இருக்கிறது.


இந்த நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு. அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்துள்ளது இங்குள்ள அதிமுக அரசு.


மாணவர்களின் மருத்துவக் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டன மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகள். இந்தத் துரோகத்தை பெற்றோரும் - மாணவர்களும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.