திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு, தனி ரயில்வே கோட்டம் அமைக்க, நெல்லை, குமரி எம்.பி.,க்கள் குரல் கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சென்னையை தலைமையிடமாக கொண்டு, தெற்கு ரயில்வே மண்டலம் செயல்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் தமிழகத்தில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய நான்கு ரயில்வே கோட்டங்களும், கேரளாவில், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இரு கோட்டங்களும் செயல்படுகின்றன. 


குறிப்பிட்ட இந்த கோட்டங்களில் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக் கூடியதாகவும், மிகப் பெரிய ரயில் நிலையமாகவும், திருநெல்வேலி உள்ளது. ஆனால் இங்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிகை குறைவு.


திருநெல்வேலியை அடுத்துள்ள மேலப்பாளையம் துவங்கி, வள்ளியூர், நாங்குநேரி, பணகுடி, குமரி மாவட்டத்தில் வரும் ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை ரயில் நிலையங்கள், கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், குமரி, நாகர்கோவிலில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக, வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் குறைவாக உள்ளன. மாறாக, குமரி, நாகர்கோவிலில் இருந்து கேரள மக்கள் பயன்பெறும் வகையில், கேரளா வழியாக, வட மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


மேலப்பாளையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வேலைபார்க்கும் ஊழியர்கள், தங்கள் குறைகளுக்கு தீர்வு காண, திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளை நாட வேண்டியுள்ளது. 


பயணியர் மற்றும் ரயில்வே ஊழியர்களின் நலன் கருதி நெல்லை, குமரி, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை, திருச்செந்துார், துாத்துக்குடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களை இணைத்து, நெல்லையை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. 


இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - ஞானதிரவியம், காங்., - வசந்தகுமார் ஆகிய, எம்.பி.,க்கள் இணைந்து, நெல்லை கோட்டம் அமைக்க, பார்லிமென்டில் குரல் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.