தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் நிர்மலா தேவி வழக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், மதுரைக்கிளை உயர்நீதிமன்ற வரும் ஜூலை 16 ஆம் தேதிக்குள் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு ஆணையிட்டது. மேலும் நிர்மலா தேவி சம்பந்தமான வழக்கு 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 


இந்த உத்தரவை அடுத்து, இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், நிர்மலா தேவி சம்பந்தமான வழக்கின் 1160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிர்மலா தேவியின் குரல் மாதிரி சோதனையின் முடிவுகள் கிடைத்தபிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி விசாரணை குழு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.