தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் நிர்மலா தேவி வழக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என தெரிவித்து விட்டது. ஆனால் தனக்கு ஜாமின் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி பலமுறை மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்மலா தேவி ஜாமீன் குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 


இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு சார்பில், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசு தரப்பில் எந்தவித தடையும் இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தான் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது எனக் கூறியது. மேலும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் குறித்து சிபிசிஐடி தரப்பு மார்ச் 11 ஆம் தேதி பதிலளிக்குமாறு கூறியது.


இந்தநிலையில், இன்று நிர்மலா தேவிக்கு ஜாமீன் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, பேராசிரியை நிர்மலா தேவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.