தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.


இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.


இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்தபின்பு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் உடல் வெப்ப நிலையை பதிவு செய்யும் பிரத்யேக கருவி மூலம் பரிசோதித்து வருகிறது. சர்வதேச விமான நிலையங்களான திருச்சி, கோவையில் நவீன கருவி மூலம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் இதுகுறித்து பதற்றமோ, அச்சமோ அடைய தேவையில்லை. கொரோனா  வைரஸ் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுகுறித்து தினமும் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சுகாதாரத்துறை முழு கண்காணிப்பில் உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள 9 கல்லூரிகளில் வரக் கூடிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இருக்காது. அதற்கடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.