ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!
அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் -ஓபிஎஸ்
சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று இபிஎஸ் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் பேசிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா (Sasikala), திடீரென அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் "காலத்திற்காய்க் காத்திருப்பவன் ஏமாளி. காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்தது தானே. வெல்வோம் சகோதரர்களே, நான் இருக்கிறேன் என்பதை விட நாம் இருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும். தலைவி புகழ் நிலைக்கட்டும். பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும்" எனக் கடிதத்தில் கூறியிருந்தார்.
அதனையடுத்து, அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா (Sasikala) எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார். மேலும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா" என பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
ALSO READ | அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்; சர்ச்சையாகும் விவகாரம்
அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளிலும், தொண்டர்களிடம் பேசும் போதும், அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம் என்பதை பலமுறை சுட்டிக்காட்டி பேசி வருகிறார். தொண்டர்களை கவனிக்காமல் நடந்துகொண்டால், அது கட்சியை பாதிக்கும் என்றும், தற்போதைய கட்சி தலைமையில் இருப்பவர்கள் தொண்டர்களுக்கு ஏதுவான சூழலை அமைத்து தரவில்லை என்றும் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை மறைமுகமாக சாடினார்.
அதேநேரத்தில் இபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க முடியாது எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே. இதில் என்ன இருக்கிறது. யாருக்கு என்ன பயம். சூரியனை பார்த்து... வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. ஏற்கனவே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் நாங்கள்தான் அதிமுக என்று தெரிவித்துவிட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது. அவர்கள் பொழுதுபோகாமல் ஏதாவது கூறி வருகிறார்கள். அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு
இந்தநிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் பேசிய அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ALSO READ | AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR