தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்களில் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதில்லை என திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கண்மாய், குளங்கள் தூர்வாரும் பணிகளில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், நீர்நிலைகள் தூர்வாரும் பணியை அரசு விதிப்படி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 


மேலும் நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க, நபார்டு வங்கி தமிழகத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள நிலையில், அது முறையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீர்நிலைகள் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.