நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!
Organic Farmer: இன்றைய நவீன காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அவ்விவசாயத்தை லாபகரமாக செய்து வருகிறார் விவசாயி பொன்முத்து.
Organic Farmer: நோய்தொற்று காலத்திற்கு பிறகு உணவு மற்றும் விவசாயத்தின் அருமையை பலரும் உணர்கின்றனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து வருகின்றனர். இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் விவசாயி பொன்முத்து.
பல்லடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெரடமுத்தூர் கிராமம். அங்கு கடந்த ஏழு வருடங்களாக 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். வாழை, தென்னை, மஞ்சள், சின்ன வெங்காயம்,தக்காளி மற்றும் பழ மரங்களென பலப்பயிர் சாகுபடி முறையை பின்பற்றி வெற்றி கண்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த இவர் தனக்குள் ஏற்பட்ட ஒரு தேடலின் மூலம் இயற்கை விவசாயியாக மாற்றம் அடைந்துள்ளார். அவருக்குள் அந்த ஆழ்ந்த தேடலை உருவாக்கிய தருணம் எது என கேட்ட போது, “பயிர்களுக்கு பூச்சி கொல்லிகளை கொடுத்த பின் அந்த கையை பலமுறை கழுவினாலும், என் குழந்தைகளுக்கு உணவு ஊட்ட மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த பூச்சிகொல்லிகளின் வாசம் எத்தனை முறை கழுவினாலும் கையை விட்டு அகலுவதில்லை. எனில், இந்த நஞ்சுமிகுந்த இரசாயானங்கள் தெளித்த பயிரை நாம் விளைவித்து, அறுவடை செய்து அதை குழந்தைகளுக்கும் கொடுக்கிறோமே இதுசரியா?.. இப்படியொரு கேள்வி எனக்குள் வந்த போது, இதற்கான மாற்று குறித்து யோசித்தேன்.
என் தேடலின் பயனாய் 2015 ஆம் ஆண்டு ஈஷா நடத்திய சுபாஷ் பாலேக்கரின் 7 நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இயற்கை விவசாயம் குறித்த பல விஷயங்களை கற்று கொண்டேன் இன்று 7 வருடங்களாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்” என்றார்.
இன்றைய நவீன காலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். அதிலும் குறிப்பாக அவ்விவசாயத்தை லாபகரமாக செய்து வருகிறார். இது போல ஒவ்வொரு விவசாயிகளும் லாபகரமாக இயற்கை விவசாயம் செய்வதற்கான குறிப்புகளை சொல்ல முடியுமா என கேட்ட போது “நீங்கள் சொல்வது போல இயற்கை விவசாயம் செய்வதே சவால் தான், அதிலும் லாபம் பார்த்தல் என்பது சாதரணமான விஷயமல்ல. என்னுடைய அனுபவத்தில், விளைவித்த பொருட்கள் அனைத்தையும் நுகர்வோரிடம் சரியான விலையில் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது தான் வெற்றிக்கான சிறந்த வழி. அதைகாட்டிலும் மிக முக்கியமான விஷயம், விளைவிக்க கூடிய பொருளை, பொருள் விளைந்த அடுத்த 15 கி.மீக்குள்ளாகவே விற்பனை செய்து விட வேண்டும். இது தான் லாபத்தை ஈட்ட சரியான வழி. நம் வீட்டிற்கு போக மீதமிருப்பதை உள்ளூருக்கும், உள்ளூரில் விற்றது போக மீதத்தை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எடுத்து செல்லலாம். ஆனால் முடிந்த அளவில் குறுகிய தொலைவில் விற்பதன் மூலம் பல செலவீனங்களை கட்டுப்படுத்த முடியும்” என்றார்
செலவீனங்களை பற்றி பேசுகிற போது இடுபொருள் சார்ந்த பெருத்த செலவு விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. அதை எப்படி கையாள்கிறார் என நாம் தெரிந்து கொள்ள முனைந்த போது, அவர் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்களை அவரே தயாரிக்கிறார் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்திலை கசாயம், உள்ளிட்ட இடுபொருட்களை அவர் பண்ணையிலேயே தயார் செய்கிறார். ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டு சர்க்கரை வேண்டும், அதை கூட வெளியே வாங்காமல் நாட்டு சர்க்கரைக்கு மாற்றாக பப்பாளிகளை விளைவித்து அவற்றையே பயன்படுத்துகிறார்.
15 ஏக்கர் நிலத்தில் பல பயிர் சாகுபடி மூலம் நீங்கள் அடைந்த லாபம் என்ன என கேட்ட போது “விவசாயத்தில் லாபம் என்பது மக்களின் ஆரோக்கியம் மட்டுமே. இதில் பணத்தை லாபம் என கருதுவது சரியல்ல, மனிதர்களின் ஆரோக்கியத்தை தான் லாபமாக கருத வேண்டும். விவசாயம் என்பது வியாபாரமல்ல அதுவொரு வாழ்வியல் முறை.
மேலும் படிக்க: மண் வளத்தை பாதுகாக்க ஐநாவின் ஒலித்த சத்குருவின் குரல்
மேலும், இந்த ஏழாண்டு கால உழைப்பின் பயனாக இன்று பல்லடத்தில் “சிவன் சந்தை” என்கிற விற்பனை தளத்தை தொடங்கியுள்ளோம்.முதலில் இரண்டு விவசாயிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சந்தையில் இன்று 10 விவசாயிகள் வரை இருக்கின்றனர். நாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறோம். நாங்கள் விற்க தொடங்கிய சில மணி நேரங்களில் எல்லாம் காய்கறிகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இந்த இடத்தை அடைய எனக்கு ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அடுத்து இதை திருப்பூருக்கு விரிவு படுத்தும் திட்டமும் இருக்கிறது. என் குடும்பம் மருத்துவ செலவுகள் இல்லாமல் வாழ்கிறது இதை காட்டிலும் வேறென்ன லாபம் எனக்கு தேவை?” என்றார்.
இயற்கை விவசாயம் சார்ந்து தனக்கெழும் பல கேள்விகளுக்கு ஈஷாவின் வாட்சப் விவசாய குழுக்கள் மூலம் தனக்கு விடை கிடைப்பதாக கூறிய அவர் “நஞ்சில்லா உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அவரின் நோக்கம் என தெரிவித்தார்.
ஆரோக்கியமான உணவு கிடைக்க மண் வளமாக இருக்க வேண்டும், மண் வளம் கூட மரம் வேண்டும், அந்த மரம் விவசாயிகளின் கரங்களுக்கு எளிதாக சென்று சேர ஈஷா காவேரி கூக்குரல் சார்பாக 30க்கும் மேற்பட்ட நாற்று பண்ணைகளில் 14 வகைக்கும் மேலான டிம்பர் மரங்கள் வெறும் ரூ.3 க்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோவையில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை; அதிரடி காட்டிய அதிகாரிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ