பகுதி நேர ஆசிரியர் ஊதிய உயர்வு: தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது - விஜயகாந்த்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும்.
2012-ல் 5,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தமிழக அரசு உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை வழங்கவில்லை. 2014-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி ரூ 2,000 ஊதியம் உயர்த்தப்பட்டது என அரசாணை வெளியிடப்பட்டது.
2015 - 2016 மற்றும் 2016 - 2017 கல்வி ஆண்டில் ரூ 7,700 & 15,000 என மொத்தம் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 22,700 ரூபாய் நிலுவைத்தொகை மட்டும் தரவேண்டியுள்ளது. ஊக்க ஊதியத்தை மத்திய அரசு 10 சதவிகிதம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசின் இச்செயலை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக அரசு முறையாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருந்தால், இந்த கல்வியாண்டில் 9,200 ரூபாய் ஊதியமாக பெற்றிருப்பார்கள். சரியான நேரத்தில் ஊதிய உயர்வை வழங்காத காரணத்தால் பல குடும்பங்கள் கஷ்டசூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழக அரசை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள்.
இதற்கு செவிசாய்க்காத தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இன்று பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். இவர்களுடைய கோரிக்கையை ஏற்று உடனே தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சியில் வெறும் அறிவிப்பு அரசாக இருந்தது, அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசு முந்தைய அரசுபோல் வெறும் அறிவிப்பு ஆட்சியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிதியை முறையாக அந்தந்த துறைகளுக்கு உடனடியாக இந்த அரசு ஒதுக்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.