இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்து பார்த்திபன் வேண்டுகோள்...
இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக, தயாரிப்பாளர் சங்க புதிய துணைத்தலைவர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக, தயாரிப்பாளர் சங்க புதிய துணைத்தலைவர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 20-ஆம் நாள் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு தயாரிப்பாளர் சக்க அலுவலகங்களை பூட்டினர். பூட்டப்பட்ட அலுவலக பூட்டை உடைக்க விஷால் முயன்றார், இதன் காரணமாக இவர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
நடிகர் விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு துணைத் தலைவராக பார்த்திபன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தற்போது சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"பணிவாண வணக்கம்!
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும்...
நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே! உறுப்பினரானது கடமை. செயற்குழு உறுப்பினரானது இருந்ததை காட்டிலும் சிறந்ததை செய்ய நம் உழைப்பையும் நேரத்தையும் கூடுதலாக தரலாம் என்ற தர்ம சிந்தனையின்றி லாப நோக்கமல்ல. இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம், சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டதென்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபத்தொழிலாய் பதவிகளை பயன்படுத்தி யாரும் லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகிருப்பேன். நேர்முக மறைமுக கலெக்ஷன் என்று ஒன்று இருந்தால் மட்டுமே எலெக்ஷன் சூடு பிடிக்குமோ என்னவோ?
அதிரடி அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் காண்கையில் பொதுமக்களுக்கும் அதுவே தோன்றுகிறது. நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு. முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல, நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது.
சகலரிடமும் சுமூகமாக நேசக்கரம் நீட்டுபவன் நான். வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதையும் விரும்பாதவன். எனவே ஆளுங்கட்சி, எதிர்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம். நேற்று திடீரென தலைமையும், செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்த போது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன். (தேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான்)
இந்த அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை, என்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முடிவெடுத்தே EC உறுப்பினராக ஆனேன். இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே. மிச்சமுள்ள குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக்கலைஞனுக்கு உரிய மரியாதையை கெளரவமாக செய்து, அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும், ஒரே ஒரு பொறுப்பை மட்டுமாவது பொறுப்பாய் செய்திட இடையூன்றி அனைவரும் இணைந்திட வேண்டுகிறேன்.
இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியாக முடியும் வரை தலைமையின் அனுமதியின்றி தனித்தனியாக பேட்டிகள் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டுமென ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டுள்ளதால்..... இனி...." என குறிப்பிட்டுள்ளார்.