புதுவையில் பிளாஸ்டிக்கு தடை விதித்து அறிவித்தார் புதுச்சேரி CM....
புதுச்சேரியிலும் மார்ச் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு......
புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பென முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்க்கு முன்னதாக, பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் நெகிழிக்குத் தடை விதித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.