தமிழகத்தில் மீண்டுவரும் மஞ்சப்பை; மீண்டும் வரும் மஞ்சப்பை...
வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும்.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது!
50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்போது, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்து ஒரு முயற்சியாக இந்த தடை உத்தர்வு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
முன்பிருந்தே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பூ, பழக்கடைகள், தினசரி / வாரச்சந்தைகள், டீக்கடை, மெஸ், ஓட்டல்களில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் மாற்றங்கள் நிகழவில்லை. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜனவரி 1 முதல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், 'சீல்' வைக்கப்படும்.
வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். வரும் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் தடை உத்தரவு, பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தையல் கலைஞர்களிடம் இருந்து துணிப்பைகளை மொத்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்று வருகின்றனர்.