குஜராத் வந்தடைந்த பிரதமர் மோடி: அடுத்த வருகை தமிழகம்!
பிரதமர் மோடி தற்போது சூரத் வந்தடைந்தார், இன்று மாலை சென்னைக்கு வருகை தரும் அவர் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தற்போது சூரத் வந்தடைந்தார், இன்று மாலை சென்னைக்கு வருகை தரும் அவர் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அடுத்த இரண்டு நாட்களில் பிரதமர், சென்னை, புதுச்சேரி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.
அதற்காக இன்று காலை 11:45 மணியளவில் குஜராத்தின் சூரத் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். அங்கு பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்ககினார். பின்னர் பிற்பகலில், அவர் சூரத் நகரில் 'புதிய இந்திய மராத்தான்' ஓட்டத்தை தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாளை புதுச்சேரி ஆரோவிலில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார். இதற்கான முழுப்பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியானம் செய்கிறார். பின்னர் ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழா நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.