பிரதமரின் தமிழக பயணம்: தமிழில் பேசி தமிழர்களை வாழ்த்திய மோடி
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது உரையில் பிரதமர் ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார்.
சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்க தமிழகம் வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது உரையில் பிரதமர் ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார்.
‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ என்று கூறி தன் உரையை பிரதமர் மோடி துவக்கினார். '' சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கு உதவும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.” என்று பிரதமர் தமிழக மக்களையும், தமிழக விவசாயிகளையும், அரசாங்க நடவடிக்கைகளையும் பாராட்டினார்.
தனது உரையில், பாரதியாரின் 'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ' என்ற வரிகளை பிரதமர் மோடி (PM Modi) குறிப்பிட்டு பேசினார்.
மேலும் ஔவையாரின், ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்னும் வரிகளை எடுத்துக்காட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் பெருமையையும் அவர் விளக்கினார்.
ALSO READ: சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?
வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
3,770 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் (Chennai Metro) வாஷர்மன்பேட்டிலிருந்து விம்கோ நகர் வரையிலான முதல் கட்ட நீட்டிப்புப் பணிகளை பிரதமர் கொடியேற்றி துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோவின் 9.05 கி.மீ நீட்டிப்பு வட சென்னையை விமான நிலையம் மற்றும் சென்னை மத்திய ரயில் நிலையத்துடன் இணைக்கும்.
சென்னை (Chennai) கடற்கரைக்கும் அத்திப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ .293.40 கோடி செலவில் கட்டப்பட்ட 22.1 கி.மீ நீள ரயில் பாதை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை கடந்து செல்கிறது. இது சென்னை துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள போக்குவரத்தையும் எளிதாக்கும். ரயில்வேயின் இந்த பகுதி சென்னை துறைமுகத்தையும் என்னூர் துறைமுகத்தையும் இணைக்கிறது.
விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுரை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுரை-திருவாரூர் ஆகிய இடங்களில் ஒற்றை ரயில் பிரிவின் மின்மயமாக்கல் பணிகளை மோடி திறந்து வைத்தார். ரூ. 423 கோடி செலவில் முடிக்கப்பட்ட இந்த 228 கி.மீ பாதையின் மின்மயமாக்கல், சென்னை எக்மோர் மற்றும் கன்னியாகுமரி இடையே சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யும். இது ஒரு நாளைக்கு சுமார் 14.61 லட்சம் எரிபொருளை மிச்சப்படுத்தும்.
கிராண்ட் அனிகட் கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு இந்த கால்வாய் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த கால்வாய் ரூ .2,640 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும். இது கால்வாய்களில் நீர் கொண்டு செல்லும் திறனை அதிகரிக்கும்.
ஐ.ஐ.டி-மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் சென்னைக்கு அருகில் கட்டப்படும். முதல் கட்டத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த வளாகத்தை நிர்மாணிக்க ரூ .1,000 கோடி செலவாகும்.
ALSO READ: பிரதமர் மோடியின் சென்னை பயணம்; கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் முழு விபரம் ...!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR