மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுப்பது கண்டிக்கத்தக்கது.


மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலருக்கு இதுதொடர்பாக கர்நாடக காவிரி நீர்ப்பாசன கழகத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேகதாது அணை குறித்த விவரங்களை தெரிவித்திருப்பதுடன், அவற்றின் அடிப்படையில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், மேகதாது அணை குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழகத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.


மேகதாது அணையின் திட்ட மதிப்பு ரூ.5912 என்று அதன் வரைவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.9,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அணை கட்டப் படும் நிலப்பரப்பு 4716 ஹெக்டேராக இருக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது  அணை கட்டப்படும் நிலத்தின் அளவு 5252 ஹெக்டேராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நீர்த்தேக்கப் பரப்பும் 4996 ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேகதாது அணையின் மொத்தக் கொள்ளளவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 67.14 டி.எம்.சி என்ற அளவிலிருந்து அதிகரிக்கப் படக்கூடும் என்றும், இது 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக இருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது.


கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.59 டி.எம்.சி ஆகும். இந்த நிலையில் மேகதாதுவில் 70 டி.எம்.சி அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளின் கொள்ளளவு 175 டி.எம்.சியாக இருக்கும். இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவை விட இரு மடங்காகும்.  கர்நாடகத்தின் நீர்த்தேக்கத் திறன் இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டால், கர்நாடகம் அதன் தேவைக்காக கூடுதல் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமே தவிர, நிச்சயமாக தமிழகத்திற்கு திறந்து விடாது.  அதனால் மேகதாது அணை கட்டப்பட்ட சில ஆண்டுகளில் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.


காவிரி ஆற்றின் முதல்மடை மாநிலமான கர்நாடகம், காவிரியின்குறுக்கே ஏதேனும் புதிய அணை கட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும். இது காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 09.06.2015 அன்று எனக்கு எழுதியக் கடிதத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், மேகதாது அணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் செய்திருப்பது ஏமாற்று வேலை ஆகும். இம்மனுவை ஆய்வு செய்வது நீதிமன்ற மதிப்பு என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.


மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கர்நாடக அரசு கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும். காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்விஷயத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மேகதாது அணை ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தான் என்பதால் அதையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.