IIT-ல் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது -PMK!
IIT-யில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
IIT-யில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "சென்னையிலுள்ள ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நாளை நடைபெற இருக்கும் வைரவிழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக வந்தேமாதரம் பாடலைப் பாட அதன் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழை திட்டமிட்டு அவமதிக்கும் வகையிலான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் வைரவிழா நிறைவுக் கொண்டாட்டங்கள் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் நாளை மாலை நடைபெறவிருக்கின்றன. இதற்காக அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாது என்று உணர்த்தப்பட்டிருக்கிறது. விழாவின் தொடக்கத்தில் 3 நிமிடங்களுக்கு வந்தே மாதரம் பாடம் இசைக்கப்படும் என்றும், விழாவில் நிறைவில் தேசிய கீதம் பாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லாததால் அப்பாடல் இசைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் எந்தவொரு அரசு விழாவாக இருந்தாலும், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் விழாவாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். இது குறித்து இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், வரலாற்று சிறப்பு மிக்க வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது தமிழுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பு ஆகும்.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26&ஆம் தேதி அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்ட விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மகாகணபதி என்று தொடங்கும் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது. அதற்கு முதன்முதலில் நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். அதன்பின் மற்ற கட்சித் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அதைத் தொடர்ந்து இச்சர்ச்சை குறித்து விளக்கமளித்த இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, ‘‘சமஸ்கிருத பாடலை பாட ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. மாணவர்களே தாமாக வந்து பாடினர்’’ என்று ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கத்தை அளித்தார். எனினும் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பாஸ்கர் ராமமூர்த்தி, இனிவரும் காலங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, இப்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்றால் அது அறியாமல் நடந்த தவறு இல்லை; திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற மத்திய அரசு நிறுவனம் தான் என்றாலும் கூட, உள்ளூர் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விஷயங்களில் அது தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அமைப்பதற்காக நிலத்தை முழுமையாக வழங்கியது மாநில அரசு தான். தமிழகத்தில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகம் தமிழுக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராக செயல்படுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நாளை நடைபெறவுள்ள வைரவிழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய குறிப்புகள் இடம் பெறாததை தெரியாமல் நடந்த தவறாக பார்க்காமல், தெரிந்தே செய்யப்பட்ட குற்றமாகக் கருதி உரிய வழிகளில் விளக்கம் கேட்டு தமிழக அரசு கண்டிக்க வேண்டும். தமிழை அவமதித்ததற்காக தொழில்நுட்பக் கல்வி நிறுவன நிர்வாகம் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளை நடைபெறவுள்ள வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.