ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


RAED | பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது: PMK


ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் சொகுசுக் கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு  சொந்தமான பால்மோரல் என்ற சொகுசுக் கப்பல் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்காட்லாந்துக்கு சென்று திரும்பும் போது, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கப்பல் ஸ்காட்லாந்து நாட்டு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடக்கத்தில் பயணிகள், கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட எவரும் வெளியேற அனுமதிக்கப்படாமல் சொகுசு கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


கொரோனா ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில் சொகுசுக் கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கப்பலில் பணியாற்றி வந்த தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு தாயகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், கப்பல் முடக்கப்பட்டு  3 மாதங்களாகியும் இன்று வரை அந்தக் கப்பலில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த 48 ஊழியர்களும் மீட்கப்படவில்லை. அவர்களில் 5 பேர் தமிழர்கள். அவர்கள் கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, வேலூர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தங்களுடன் பணியாற்றிய அனைவரும் சொந்த ஊருக்கு  திரும்பி விட்ட நிலையில், அவர்கள் மட்டும் இன்னும் கப்பலிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.


கப்பலில் சிக்கித் தவிக்கும் 48 பேரும் தங்களின் மாநில அரசுகள் மூலமாக தாயகம் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கும், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். எனினும், இந்திய அரசிடம் இருந்தோ, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில அரசுகளிடமிருந்தோ இதுவரை எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்காததால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 5 பேர் உட்பட 48 பேரும் 3 மாதங்களுக்கும் மேலாக கப்பலில் இருந்தாலும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கப்பல் நிறுவனம் பார்த்துக் கொள்கிறது. அதனால் அவர்களுக்கு சிக்கல் இல்லை என்றாலும் கூட, இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தங்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிக் கொள்ளுமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது.


READ | கொரோனாவுக்கு மத்தியில் NEET தேர்வு தேவையா? இராமதாசு காட்டம்!


உலகின் எந்த நாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டு வர வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இன்னும் பல நூறு பேர் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் முடங்கியுள்ளனர். லண்டனில் இருந்து ஒரே ஒரு விமானத்தை இயக்கினாலே அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியும்.


எனவே, வந்தே பாரத் இயக்கத்தின் மூலம் லண்டனுக்கு சிறப்பு விமானத்தை இயக்கி, ஸ்காட்லாந்தில் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களையும் மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.