சார்பதிவாளர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் இராமதாசு அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது   வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு போராடிப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் இத்தீர்ப்பு பதிவுத்துறையில் இன்னும் செயல்படுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.


வணிகவரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. துணை வட்டாட்சியர் பணியிடங்கள் முழுக்க முழுக்க மாறுதல் மூலமான நியமனம் வழியாக நிரப்பப்படுகின்றன. உதவியாளர் நிலையில் இருப்பவர்கள் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்பதால், இப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறினார்கள்.


இதே காரணத்தை முன்வைத்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை  பணிகளில் நியமிக்கப்பட்டால் அதை பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனால் இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கடந்த 2005&ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தான்  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணி நியமனங்களில் கடந்த 14 ஆண்டுகளாக  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த அநீதி களையப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வட்டாட்சியர்கள்,  உதவி வணிகவரி அலுவலர்கள் நியமனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுத்துறையிலும் இத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று அத்துறையை நிர்வகிக்கும் வணிகவரித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், அத்தீர்ப்பு இன்று வரை பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பதிவுத்துறை பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இதுகுறித்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட  இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி புதிய பணி மூப்பு வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தான் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், 2016-17 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் கடந்த 12.02.2019 அன்று வெளியாகியுள்ளது. 


அதுமட்டுமின்றி 2017-18, 2018-19 ஆம் ஆண்டுகளுக்காக மாவட்ட பதிவாளர் பணியிடங்கள், 2018-19 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை சார்பதிவாளர் பணியிடங்கள் ஆகியவற்றுக்கான பதவி உயர்வு பட்டியலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டு, வெளியிடத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது நடந்தால் அது மிகப்பெரிய சமூக அநீதியாக அமைந்துவிடும்.


இரண்டாம் நிலை சார்பதிவாளர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், மீண்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அதைவிட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் இழைக்கப்பட்ட அநீதியை, தமிழக அரசு தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து துடைத்தது. அதன் பயன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் போராடிப்பெற்ற தீர்ப்பு பயனற்றதாகிவிடும்.


எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார்பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் பதிவுத்துறை தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் அரசு நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.