காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், அரசு செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் காட்டும் தன்னலமற்ற ஈடுபாடும், தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத்தக்கவை. அதேபோல், அவசர ஊர்தி  பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் காட்டும் தியாக உணர்வும் உன்னதமானவை.


மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி எப்போதுமே உயிர்களைக் காப்பாற்றுவது தான். உயிர்களைக் காப்பாற்றுவது  அவர்களின் வழக்கமான கடமை தான் என்றாலும் கூட, இப்போது கொரோனா என்ற கொடிய வைரசிடமிருந்து உயிர்களைக் காப்பது சவால் நிறைந்த போராக மாறியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தங்களின் உயிர்களை தியாகம்  செய்யும் வரலாறு இன்னும் தொடர்கிறது.


தமிழகத்திலும் அத்தகைய தியாகத்திற்கு தயாராகத் தான் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தன்னலமற்ற பணியையும், தியாக உணர்வையும் போற்றும் வகையில் தான் அவர்களுக்கு காப்பீடும், சிறப்பு ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதையேற்று மத்திய அரசு அவர்களுக்கு காப்பீடு வழங்கியது. தமிழக அரசும் அதன் பங்குக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


இத்தகைய பணி அங்கீகாரமும், சிறப்பு ஊதியமும் இன்னும் பல பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் காவல்துறையினர் ஆவர், கொரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகத் தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை  புரிந்தும் கூட, சட்டத்தை மீறி சாகசம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் சாலைகளில் வலம் வந்து, கொரோனாவை வரவேற்கும் செயல்களில் ஈடுபடும் போது, பலரிடத்தில் கனிவாகவும், சிலரிடத்தில் கடுமையாகவும் நடந்து கொண்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்துகின்றனர். பணியின் போது கொரோனா தாக்கும் ஆபத்து இருக்கும் போதிலும், அதை பொருட்படுத்தாமல்  துணிந்து பணியாற்றுகின்றனர். ஊரடங்கு 90 விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றிருப்பதற்கு காவல்துறை தான் முக்கிய காரணமாகும்.


அதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 அவசர ஊர்தி பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இந்த இரு பிரிவினரின் பணியின் போதும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம் ஆகும். ஆனாலும் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் துணிந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தியாகத்தால் தான் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது.


இவர்களின் தியாகமும், தன்னலமற்ற சேவையும் போற்றத்தக்கது ஆகும். அவற்றை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும், ரூ.50 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் காவலர் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கும், பணி நேரத்தில் அளிக்கப்படும் வேலைகளுக்காகவும் தங்களின் இரு சக்கர ஊர்தியில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஆகும் செலவை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு தற்காலிகமாக எரிபொருள் படி வழங்க அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.