கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கிடு -PMK!
6 ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
6 ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் தவிக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கிடைப்பதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக மாறியிருக்கிறது. அந்த சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 737 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 537 சங்கங்கள், அதாவது 73 விழுக்காடு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக 356 சங்கங்களில் பணியாற்றி வரும் 1014 ஊழியர்களுக்கு, அதிகபட்சம் கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.55 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடி வருகின்றன. குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இந்த அவல நிலைக்கு காரணம், அவற்றின் மூலம் வழங்கப்பட்ட வீட்டுக் கடன் சரியாக வசூலிக்கப்படாததும், வேறு சில நிர்வாகக் குளறுபடிகளும் தான். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மூலம் வீட்டுக்கடன் பெற்றவர்களில், 57,387 பேர் ரூ.1,108 கோடி கடனை பல ஆண்டுகளாக செலுத்தாததால், அவற்றின் மதிப்பு வட்டியுடன் சேர்த்து ரூ.2,839 கோடியாக உயர்ந்து உள்ளது. கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு பெரிய அளவில் சொந்த முதலீடு இல்லாததாலும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராமல் முடங்கி விட்டதாலும், சங்கங்களின் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.
1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி வாரியங்கள் 2007-ஆம் ஆண்டு வரை லாபத்தில் தான் இயங்கின. இந்த காலகட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஈட்டிய லாபத்தின் மதிப்பு மட்டும் ரூ.12,000 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின் போது வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்தும், அதிகாரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களிடமிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது தான் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் நலிவடைவதற்கு காரணமாகும்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீட்டுக் கடனை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையினர் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் நிலுவை வைத்துள்ள தொகை ரூ.951.82 கோடி ஆகும். குறைந்தபட்சம் இந்தத் தொகையை வசூலித்தால் கூட, அனைத்து சங்கங்களின் கடன்களையும் அடைத்து விட்டு, சங்கங்களை மீண்டும் லாபத்தில் இயக்க முடியும். ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெறப்பட்ட கடன்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் அதை நம்பி பலரும் கடன் தவணையை திரும்பச் செலுத்த தயங்கின்றனர். இது தான் இந்த சங்கங்களுக்கு புத்துயிரூட்ட தடையாக உள்ளது.
கடந்த காலங்களில் வீட்டுக்கடன் வழங்குவதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ.5078 கோடி கடன் வாங்கிய கூட்டுறவு சங்கங்கள் அவற்றில் ரூ.438 கோடியை திரும்பச் செலுத்தவில்லை. இந்த கடனை திரும்ப செலுத்துவதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த அளவில் மறு முதலீடும் வழங்கப் பட்டால் அவை மீண்டும் லாபத்தில் இயங்கத் தொடங்கி விடும். தமிழக அரசின் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஊராட்சி முகமைகளிடருந்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு மாற்றப்படும் பட்சத்தில் அச்சங்கங்கள் வலிமையடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் கூட உருவாகும்.
எனவே, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் குழுமை அமைத்து, அதன் மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.