ஆட்சி, அதிகாரத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு - இராமதாசு!
ஆட்சி, அதிகாரத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சாத்தியமாகட்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
ஆட்சி, அதிகாரத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சாத்தியமாகட்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது... "உலகின் ஆக்கும் சக்தியான மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்குடன் உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. அதிகாரத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான வாக்குரிமை ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்ட போதிலும், அந்த அதிகாரத்தை மகளிர் அனுபவிக்கும் வகையிலும், கொள்கை வகுப்பதில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை 9 ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின்னர் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது. நடந்தவை நடந்தவையாக இருந்தாலும், நடப்பவை நல்லவையாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது. 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை உலக மகளிர் நாளான மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் நாளில் அறிவிக்கப்படும் அட்டவணையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவையிலாவது மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா உள் ஒதுக்கீட்டுடன் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான 33% இட ஒதுக்கீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.