தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று கூறியுள்ளதை அடுத்து, இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு குறைந்த தொகையையே வழங்குவதாகவும், இத்தகைய சூழலில் தமிழகத்தில் எரிபொருள் விலைகளை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகி விடும் என்று கூறியிருக்கிறார். இது தவறு.


மத்திய அரசின் கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வசூலிக்கப்படுவது உண்மை. அதில் பெருந்தொகையை சிறப்புத் தீர்வைகள் என்றும், வேளாண் கட்டமைப்புத் தீர்வை என்று அறிவித்திருப்பதால் அதில் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை. மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட வேண்டும்; கலால் வரியில் மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது


ALSO READ| Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்


 


ஆனால், நான் கேட்க விரும்புவது மத்திய அரசு கலால் வரியை ஒரே நாளில் உயர்த்தி விடவில்லை. 2014 &ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து  உயர்த்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13 &ஆம் தேதி வெளியிட்ட போதும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன. அவற்றைக் கணக்கிட்டு தான் திமுக தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்? சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா?


மேலும், மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது  தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை மூடி மறைத்து விட்டார். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில் மாநில அரசின் வரி 34%, அதாவது சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால் ரூ.26.30. ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. 


பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில  அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழ்நாடு, மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளைக் குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை. திமுக அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான்  இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக்கூடாது.


ALSO READ: Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR