சட்டப்பிரிவு 370 நீக்கத்தினை அடுத்து தமிழகத்தில் கிளர்ச்சி ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், காவல்துறை இயக்குநர்கள், டெல்லி காவல் ஆணையர் ஆகியோருக்கும், பாதுகாப்பு படைகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் போன்ற அமைப்புகளும் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.


தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் கண்காணிப்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி திரிபாதி மண்டல ஐஜிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களிலும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்க 4 கூடுதல் டிஜிபிக்கள் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர்.


முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மோடி அரசு வரலாற்று முடிவு ஒன்றை திங்கள்கிழமை எடுத்தது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். 


மேலும் ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்து, சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தார். இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்து இழந்துள்ளது. இனி மத்திய அரசு நினைத்தபடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை மாற்ற முடியும். மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.