திமுக தலைவர் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் கோவை தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் கோவை தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் வாகனத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தினை ஆதரித்து பேசியபோது, 'உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதிலும், வேலுமணி உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்த இயலவில்லை.
அவருக்கு ஊழல் தான் நோக்கம். ஊழல் செய்வதில் அவர் தான் நம்பர் ஒன். ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே மிஞ்சியவர். தமிழகத்திற்கு ஊழலிலே முதலிடம் வாங்கிக்கொடுத்தவர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி மீது ஊழல் வழக்கு போடப்படும்' என கூறியிருந்தார்.
இதையடுத்து அமைச்சர் வேலுமணி மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியதாக அதிமுவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் 3 பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.