பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என வைகோ யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கூறியுள்ளார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வைகோவை சொற்களால் தாக்கியுள்ளார். 


இது குறித்து அவர் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மிக பெரிய போராளியாக திகழும் வைகோ, பிரதமரை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், கருப்பு கொடி காட்டுவோம் என கூறியிருக்கிறார். சிலரை திருப்திப்படுத்துவதற்காக, தான் சார்ந்திருக்க கூடிய கட்சிக்கு சில அரசியல் ரீதியான ஆதாயங்கள் தேடி தர நினைப்பதும்  தான் அவர் பேச்சுக்கு காரணம் என நம்புகிறேன். அவர் எதற்காக சொல்லி இருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். 


பிரதமர் தமிழகத்திற்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். அவர்கள் எந்த விதமான போராட்டங்களை நடத்துவதாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கடக்க வேண்டாம். யாரை வேண்டும் என்றாலும் திருப்தி படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக யாரையும் அவமானப்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் அது தமிழகத்தில் நடக்காது. 


இதற்கு முன் வைகோ பேசியது, இப்போது பேசிக்கொண்டு இருப்பது எல்லாம் மதிமுகவினை சேர்ந்தவர்களையே வருத்தப்பட வைத்துள்ளது. அதுமட்டும் இல்லை துரைமுருகன் போன்றவர்கள் கூட்டணி தொடர்பாக எப்படி பேசினார்கள் என்பதை பார்த்தோம். தற்போது எப்படியாவது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் மறுமலர்ச்சி திராவிட கழகம் தள்ளப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. 


திமுகவில் இருப்பவர்கள் அத்தனை பேரும் மதிமுகவை ஏளனமாக பார்ப்பார்கள் என்பது உறுதி. மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அணை கட்டுவதற்கு முழு எதிர்ப்பை நான் தெரிவித்து வருகிறேன். 


புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழு இன்னும் முழு அறிக்கையை கொடுக்கவில்லை. தற்போது கொடுக்கப்பட்டுள்ள நிதி மத்திய அரசே முன்வந்து கொடுத்தது. எனவே ஆய்வு அறிக்கை சமர்பித்த பிறகு தான் நிதி கொடுப்பார்கள்" என தெரிவித்தார்.