விசாரணை, தீர்ப்பெல்லாம் விநோதமா இருக்கு - பொன்முடி வழக்கில் நீதிபதி விளக்கம்
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 26ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க, மே மாத விடுமுறையில் சிறப்பு அமர்வாக விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டபோது, அதை உயர் நீதிமன்றம் நிராகரித்தாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியாக உள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை வேலூருக்கு மாற்றுவது குறித்து தலைமை நீதிபதிக்கு அனுப்பிய குறிப்பை ஏற்று, தலைமை நீதிபதி ஒப்புதலுடன் வழக்கு 2022ஆம் ஆண்டு ஜூலை 16ல் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டதாகவும், சாட்சி விசாரணை நடைமுறைகளை தொடர்ந்ததாக கடந்த ஆண்டு அக்டோபர், இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வேலூர் நீதிமன்ற நீதிபதி தரப்பிலிருந்து, தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களில், 172 சாட்சியங்கள், 381 ஆவணங்களை ஆய்வு செய்து, ஜூன் 28ஆம் தேதி 226 பக்கங்களை கொண்ட தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் நீதிபதி ஓய்வுபெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குற்ற விசாரணை நடைமுறையை திரிக்கும்வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
வழக்கை விரைந்து விசாரிக்க அனுமதி கோரிய நீதிபதியே அந்த வழக்கை விசாரிக்க கூடாது என தடைவிதித்தது, கேள்விப்படாத ஒன்றாக இருப்பதாகவும், வேறொரு மாவட்டத்திற்கு வழக்கை குறிப்பின் மூலம் மாற்றுவதற்கு நிர்வாக குழு நீதிபதிகளுக்கு எங்கிருந்து அதிகாரம் வழங்கப்பட்டது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார். நீதித்துறை உத்தரவு மூலமாகத்தான் மாற்ற முடியும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.
வழக்கை மாற்றுவது தொடர்பாக நிர்வாக நீதிபதிகள் இருவர் மட்டும் முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என்றும், விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடியக்கூடிய தருவாயில் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளுக்கு பணிகளை ஒதுக்கும் தலைமை நீதிபதிக்கு இருக்கும் நிர்வாக அதிகாரத்தை ஒரு வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றும் விவகாரத்தில் பின்பற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நீதி பரிபாலனம் தவறியதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ