சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக பொன். மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்து வருகிறது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகளை அரசு செய்துக் கொடுக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள், வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை என பொன். மாணிக்கவேல் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள அவர் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.


நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த பிரிவுக்கு தேவையான 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்கவில்லை என்றும், தேவையான வாகனங்கள் ஆகியவற்றை தரவில்லையென்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே அதிகாரிகள் இப்படி செய்கிறார்கள் என்றும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் நீதிமன்ற அனுமதியின்றி ராஜேஸ்வரி என்பவர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதால், அவர்களை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 


தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோருக்கு எதிராக  சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தை பொன்.மாணிக்கவேல் நாடியிருப்பது இது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது