கொளத்தூரில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலைய பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி., 6-ஆம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்., "கொளத்தூர் பகுதியில் உள்ள நேர்மை நகரில் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 2019-க்குள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி முடிவடையவில்லை.


இதுபோல் கொளத்தூர் கணேஷ் நகரில் 230 கிலோவாட் திறன் கொண்ட மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.


இதுகுறித்து சட்டசபையில் 3 முறை கேள்வி கேட்டேன். நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலையம் அமைந்தால் கொளத்தூர் பகுதியில் உள்ள 40 இடங்கள் பயன்பெறும். எனவே, இதை உடனே நிறைவேற்றி தரவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பணி எப்போது நிறைவடையும்?" என கேள்வி எழுப்பினார்.


திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி., "கொளத்தூர் நேர்மை நகரில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி எதிர்வரும் 10 நாட்களில் தொடங்கும். ஒரு மாதத்தில் நிறைவடையும்" என தெரிவித்தார்.


மேலும், கணேஷ் நகரில் மின்நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அதைத்தொடர்ந்து மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்றும், விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.