தமிழகத்திலுள்ள பழமையான கோவில்களில் விபத்துகளை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், அனைத்து கோவில்களிலும் தீத்தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 
கோவில்களில் தீத்தடுப்புக்குத் தேவையானவை மற்றும் நிதி குறித்து அறிக்கை தயார் செய்து, அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு பரிசீலித்து முதலமைச்சரிடம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள்ளும், மதில் சுவரை ஒட்டியும் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், புராதனக் கோயில்களில் தரமான, பாதுகாப்பான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


பக்தர்கள் கொண்டுவரும் எண்ணெயைச் சேகரித்து அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும், முதுநிலை திருக்கோயில்களில் 2,3 மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும், முதுநிலை கோயில்களுக்கு அருகில் தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், தீயணைப்பு உபகரணங்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


கோவில் சொத்துக்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவையான தொழில்நுட்ப மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.