விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 15.10.2019 மற்றும் 16.10.2019 அன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 


தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், புகழேந்திக்கு உதயசூரியன் சின்னமும், கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னமும், இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமான கௌதமனுக்கு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த காட்பிரே வாஷிங்டன் நோபுள் இவர்களுடன் 19 சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.


வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.