சுனாமி பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது புதுச்சேரி கடற்கரை!
புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மணல் பரப்பு சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது!
புதுச்சேரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மணல் பரப்பு சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது!
புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது கடற்கரை சாலை. அதிகாலை நடைபயிற்சி, சுற்றுலாப் பயணிகளின் கடற்கரை விளையாட்டு என எப்போது பரபரப்பாக இருக்கும் இந்த கடற்கரை பகுதி கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமிக்கு பின் பெரும் சேதமடைந்தது.
இதனால் கடற்கரையின் மணல் பரப்பு பாழானது. இதனையடுத்து மத்திய அரசு நிதி உதவியுடன் ஓராண்டாக செயற்கை மணல்பரப்பு ஏற்படும் திட்டம் நடைபெற்றது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்ட இந்த மணல்பரப்பில் தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிநவீன கருவிகள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை மணல் பரப்பு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடற்கரையின் தூய்மைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சுனாமியால் பொலிவிழந்த புதுச்சேரி கடற்கரை 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது புனர்வாழ்வு பெற்றுள்ளது. சுற்றுலா நகரமான புதுவைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் கடற்கரையில் உற்சாகமாக பொழுதை செலவிட்டு வருகின்றனர்.