சென்னை: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க்க உள்ளார். 542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்டிஏ தலைவராக பிரதமாக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக 30 -ஆம் தேதி காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் டெல்லி செல்லவுள்ளனர். பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். மேலும், இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள். 


மேலும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வரும் 30 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள செல்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த, இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, 


"மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவரக்கூடிய ஒரு தலைவர். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரால் தான் வெற்றியை பெற முடியும். மக்களை கவரக்கூடிய தலைவர்களில் நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு மோடிக்கு மக்களை கவரக் கூடிய தலைவராக உள்ளார். 


காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்யக்கூடாது. ஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம். எனவே ராகுல் காந்தி கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை. அதை ராகுல் காந்தி சரி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி மிகவும் பழமையான கட்சி, ராகுல்காந்தி போன்ற இளம் தலைவர்கள் கட்சியை வழி நடத்த வேண்டும்.


இவ்வாறு ரஜினிகாந்த கூறினார்.