ராஜராஜசோழன் விவகாரம்: பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இயக்குனர் பா.ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், அரசியல், தலித் மற்றும் சாதி தொடர்பான கருத்துக்களை பேசி வருகிறார். பலமுறை இவரது பேச்சு சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. அந்தவகையில், கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "மன்னர் ராஜராஜ சோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார். அவரது ஆட்சியிலிருந்து தான் ஜாதி கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி" என்றெல்லாம் பேசியிருந்தார்.
இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. அவரின் பேசுக்கு எதிராகவும், ஆதராகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரி இயக்குனர் பா.ரஞ்சித் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று உண்மைகளை தான் பேசினேன். நான் எதுவும் தவறாக கூறவில்லை. என்னைப் போலவே பலரும் பேசினார்கள். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. பா. ரஞ்சித்துக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது நாளை தெரியவரும்.