மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இந்நிலையில் தற்போது தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாத காலம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


மேலும் அந்த மனுவில் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.


இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. எனினும் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை.


இந்நிலையில் தற்போது லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.