சஞ்சய்க்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? மாநில அரசே விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்தி திரைப்பட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் புதல்வருமான சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத், 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சயை தாங்களே விடுதலை செய்ததாக தெரிவித்திருக்கிறது.


2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்தத் தீர்ப்பின்படி, மத்திய அரசு சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை.


மத்திய அரசின் அனுமதி பெறாமல் தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால், இவ்விஷயத்தில் மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப் பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014&ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை.


இந்தியக் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு, தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. இவற்றைப் பார்க்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் - தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்ற ஐயம் எழுகிறது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை சரியல்ல; மக்களாட்சி முறைக்கு அழகுமல்ல.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மாநில அமைச்சரவை பரிந்துரைப்படி விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு அனுப்பி, இன்றுடன் 250 நாட்களாகி விட்ட நிலையில் அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் ஆளுனர் தாமதம் செய்கிறார். தமிழர்கள் என்பதாலேயே அவர்களின் விடுதலை தாமதிக்கப்படுகிறதோ என்ற ஐயத்தை இது அதிகப்படுத்துகிறது.


7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுனருக்கு  தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுனர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.