இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து -முதல்வர் ஜெயலலிதா
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள், இப்புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இஸ்லாமியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்குவது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிருவாக மானியத்தை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிருவாக மானியத்தை1 கோடி ரூபாயாக உயர்த்தியது, ஆதரவற்ற முஸ்லீம் பெண்களுக்கு உதவிடும் பொருட்டு மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசால் வழங்கப்படும் இணை மானியத்தொகையை 1:1 என்ற விகிதாச்சாரத்திலிருந்து 1:2 என்ற விகிதாச்சாரத்தில் உயர்த்தியது; நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை வழங்குவதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும்பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.