கல்வித் தகுதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்!
பெரியார் பல்கலைகக்கழக துணை வேந்தர் பதவிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட அங்கமுத்து உள்ளிட்டவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவியை நிரப்ப தமிழக அரசு முனைவர்கள் ஸ்ரீதர், மணியன், பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
3 ஆண்டுகள் பதவி காலம் கொண்ட துணை வேந்தர் பதவிக்கு 194 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 10 பேரை நேர்காணலுக்காக தேடுதல் குழு, தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் தேடுதல் குழுவை கலைக்க கோரி பெரியார் பல்கலைகழகத்தின் பேராசிரியர் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில், நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை எனவும். தன்னை விட தகுதி குறைந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பி.எச்டி முடிக்காத பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் அங்கமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அங்கமுத்து உள்பட துணை வேந்தர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளாரா என்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.