குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்!!
இந்தியாவின் குடியரசு தினவிழா, தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.
சென்னை: இந்தியாவின் குடியரசு தினவிழா, தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.
மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான மேடையும், விழாப்பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை விழாப்பகுதிக்கு மக்கள் வரத்தொடங்கினர்.
அரசு உயர் அதிகாரிகள் வந்து விழா ஏற்பாடுகளை கவனித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரவிச்சந்திரன் உள்பட பலர் வந்தனர்.
அமைச்சர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தார். மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதே பந்தலில் பின்வரிசையில் அமர்ந்தனர்.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாப்பகுதிக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் தமிழக போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர்.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் ஆர்.கே.ஆனந்த், கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர், விமானப்படை அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகிய முப்படை அதிகாரிகள், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜன் பர்கோத்ரா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி., ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் ஆகியோரை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே தேசியக் கொடியை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுத்து வந்தனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார் போன்றவற்றுடன் விமானப்படை வாகனமும், நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனம் மற்றும் கடற்படை வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. கடலோரக் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப். படைப்பிரிவுகள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள், பெண்கள்), ஆண்கள் கமாண்டோ படை பிரிவினர் உள்பட பல பிரிவினர் அணி வகுத்து வந்தனர்.
அதைத் தொடர்ச்சியாக, கடலோர பாதுகாப்பு குழு, மோப்ப நாய் பிரிவு, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண மற்றும் சாரணியர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழா மேடைக்கு அரவருடைய மனைவி விஜயலட்சுமி, சபாநாயகர் ப.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆகியோர் வீற்றிருந்தனர்.
அதன் பின்னர் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த வரிசையில் அந்தப் பள்ளி, கல்லூரிகளுக்கு முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதில் 17 அரசுத் துறைகள் பங்கேற்றன. அந்தந்தத் துறையின் திட்டங்களை விளக்கும் வகையில் ஊர்திகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள், களிமண் உருவச் சிலை, கட்அவுட் போன்றவை அதிகம் இடம் பிடித்தன.
ஆதிதிராவிடர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஆகியவற்றின் ஊர்திகளில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெற்றிருந்தது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை முறையே வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகியவை பெற்றன.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.
குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னதாக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர் நினைவுச் சின்னத்துக்கு சென்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தின் கவர்னர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர் ராவ், மராட்டிய மாநிலத்தின் கவர்னராக இருப்பதால் குடியரசு தின விழாவுக்காக அந்த மாநிலத்துக்குச் சென்றுவிட்டார்.
எனவே, சென்னையில் நடந்த குடியரசுத் தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றும் அரிய வாய்ப்பு முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று கிடைத்தது. குடியரசுத் தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய தமிழகத்தின் முதல் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவார்.