கோரிக்கை நிறைவேற்றாவிடில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் - எச்சரிக்கும் அரசு ஆசிரியர், ஊழியர்கள்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களது கோரிக்கைகளை குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் செய்யவில்லை.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழகம் முழுவதும் சுமார் 1௦ லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர் பங்கேற்றார்கள்.
இதனால் தமிழக மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் வெறிச்சோடிப்போயின. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த போராட்டத்தில் மாவட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இந்ந ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகும் தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தாமதம் செய்தாலோ அல்லது நிறைவேற்றாமல் இருந்தாலோ, அடுத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.