மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும்: PMK
என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்திருக்கிறார். இவரையும் சேர்த்து இதுவரை இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், படுகாயமடைந்த தொழிலாளர்களில் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையம் அம்மேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 210 மெகாவாட் திறன் கொண்ட அதன் ஆறாவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இரு நிரந்தரத் தொழிலாளர்கள், 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 8 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். அவர்களில் சர்புதீன் என்ற தொழிலாளர் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், சண்முகம் என்ற தொழிலாளர் நேற்று மாலை உயிரிழந்தார். இவர்கள் தவிர பாவாடை, ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், பாலமுருகன், மணிகண்டன், அன்புராஜன் ஆகிய 6 பேர் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவம் பெற்று வருகின்றனர். இரு தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கும், மற்றவர்கள் காயமடைந்ததற்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
நெய்வேலி இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கொதிகலன் விபத்து வெடித்து ஏற்பட்டதற்கு முதன்மைக் காரணமே பராமரிப்பின்மை தான். அனல் மின் நிலையங்களை 40 ஆண்டுகள் வரையிலும், சில நேரங்களில் 50 ஆண்டுகள் வரையிலும் இயக்கலாம் என்றாலும், அவற்றின் வாழ்நாள் 30 ஆண்டுகள் மட்டும் தான். 30 ஆண்டுகள் கழித்து அனல் மின்நிலையங்களை புதுப்பித்தால் மட்டுமே அவற்றை அதிக காலத்திற்கு இயக்க முடியும். ஆனால், இரண்டாவது அனல்மின் நிலையம் தொடங்கப் பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது. அவற்றின் உள்ள 7 அலகுகளில் முதல் 3 அலகுகள் அமைக்கப்பட்டு 34 ஆண்டுகளும், அடுத்த 4 அலகுகள் அமைக்கப்பட்டு 29 ஆண்டுகளும் ஆகின்றன. ஆனாலும் அனல் மின்நிலையத்தை புதுப்பிப்பதற்கு என்.எல்.சி நிறுவனம் இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அதுமட்டுமின்றி, அனல் மின் நிலையங்கள் ஆண்டுக்கு 45 நாட்கள் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்படி செய்தால் தான் அதன் இயங்கு திறன் வலுப்படுத்தப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், பல ஆண்டுகளாகவே நெய்வேலி அனல் மின்நிலையங்களில் இத்தகைய பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. அத்துடன், பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தம் குறைந்த தொகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால், அவர்கள் எந்த பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதில்லை, அனல் மின்நிலையங்களின் பாதுகாப்பில் செய்துகொள்ளப்பட்ட சமரசங்கள் தான் இந்த விபத்து ஏற்படுவதற்கும், இருவர் உயிரிழந்ததற்கும் முக்கியக் காரணமாகும்.
இதற்குப் பொறுப்பேற்று கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த சம்சுதீன், சண்முகம் ஆகிய இருவர் குடும்பத்திற்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் என்.எல்.சியில் பணி வழங்க வேண்டும். காயமடைந்து மருத்துவம் பெற்று வரும் 6 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் குணமடைந்த பின்னர் அவர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள ஐவருக்கு பணி நிலைப்பும், நிரந்தரத் தொழிலாளரான பாவாடைக்கு பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஆபத்தான நிலையில் உள்ள ஆறு தொழிலாளர்களையும் சென்னைக்கு கொண்டு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கொதிகலன் வெடித்த விபத்து எவ்வளவு மோசமானது என்பதை நிரூபிக்க ஓர் உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். ஆறாவது அலகில் கொதிகலன் வெடித்த வேகத்தில் அதிலிருந்து உடைந்து சென்ற கூர்மையான பகுதி ஒன்று அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள முதனை கிராமத்தில் முந்திரி மரத்தை தாக்கி சேதப்படுத்தி விட்டு கீழே விழுந்துள்ளது. அது மக்கள் வாழும் பகுதியில் விழுந்திருந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. நெல்வேலியில் உள்ள மின்நிலையங்கள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் அங்கு மீண்டும், மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அனைத்து மின் நிலையங்களிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டு, பாதுகாப்பாக இயங்கத் தகுதியில்லாத அனல்மின் நிலையங்களை மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.