பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்திற்கு, மாநில அரசின் சார்பில் ரூ 2,007 கோடியே 53 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அவர் கூறியதாவது:-


தமிழ்நாட்டை குடிசைகளற்ற மாநிலமாக உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வழியில் பின்வரும் புதிய திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு அரசு ஒரு புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கை உருவாக்கும். வீடு கட்டும் செலவினத்தைக் குறைத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனைவருக்கும் போதுமான வீட்டுவசதியினை கிடைக்க செய்தல். வாங்கத் தக்க விலையில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல்; அனைவருக்கும் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குதலை உறுதி செய்தல்; நகர்ப்புற மக்களின் மாறிவரும் சமூகப் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். மனை வரைபடம் ஒப்புதல் மற்றும் கட்டட அனுமதி பெற காலக்கெடு நிர்ணயித்தல்; மூத்த குடிமக்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, வீடுகள் கட்டுதல் மற்றும் அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்; இடரற்ற வாடகை வீடு வழங்கும் முறையினை உருவாக்குதல் உட்பட மேலும் பல கொள்கையின் சிறப்பம்சங்களாகும்.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், எர்ணாவூரில் 676 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 வீடுகள் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு கட்டித் தரப்படும்.


பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1,86,308 தனி வீடுகள் 5 ஆயிரத்து 589 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மேலும், நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 இலட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மேற்கண்ட இரண்டு வகைபாட்டின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசின் மானியமாக 2,007 கோடியே 53 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.