திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது அதாவது மே 13-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 570 கோடி ரூபாய் பணத்துடன் 3 கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அதன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டு செல்லவதாக கூறப்பட்டது. முதலில் இந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. இந்த பணத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல மணிநேரம் தாமதத்துக்கு பிறகே சொந்தம் கொண்டாடியது.


இந்நிலையில், இந்த ரூ.570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் வக்கீல் நீலகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ தரப்பு விளக்கத்தை கேட்டது. பின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பையா, இந்த வழக்கில் கடந்த  ஜூன் 4-ம் தேதி தீர்ப்பளித்தார்.


அவர் தீர்ப்பில் கூறியதாவது:-இந்த வழக்கில் மனுதாரரின் புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை சிபிஐ நடத்த வேண்டும். சிபிஐ விசாரணையில் ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவை கிடைத்து குற்றம் ஏதாவது நடந்துள்ளதாக தெரியவந்தால் மனுதாரரின் புகார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து சட்டப்படி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் 


என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்திலும், மக்களிடையேவும் எழுந்துள்ளது.