"திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவச பொருட்களை எரிப்பதுபோல காட்சிகள் இருந்தன. மேலும் படத்தில் வில்லிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டன. கோமளவல்லி என்ற பெயரின் ஒரு பாதி ஒலியும் நீக்கப்பட்டது. 


இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு கோரிக்கை விடுத்தபோதும், மன்னிப்புக் கேட்க முடியாது என இயக்குநர் முருகதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில், தேவராஜ் என்பவர் அளித்த புகாரில் முருகதாஸ் மீது, இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துதல், அரசு திட்டங்களை அவதூறாக பேசுதல், அரசு குறித்து தவறாக சித்தரித்தல் 3 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


இதை தொடர்ந்து, சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்கள் திட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மனுதாரர் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தது.


அப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் மீது வெள்ளிக்கிழமை வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதில் அவசரமாக விசாரிக்க என்ன உள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.