சென்னை: தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி சசிகலா இன்று ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.


அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.


ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.


இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், அவமானம் படுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேட்டிக்கு பிறகு ஓ. பண்ணீர்செல்வத்தை அதிமுக-வின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.


இதனால் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. 


நேற்று முன்தினம் இருவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தங்கள் தரப்பைத் நேரில் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி சசிகலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.