சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?
தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள சசிகலாவின் சொத்துக்கள் மாநில நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெ.ஜயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா நான்கு ஆண்டுகால சிறைவாசம் முடிந்து சென்னை திரும்பியுள்ளார். தமிழகத்திற்கு திரும்பிய மூன்று நாட்களில், சசிகலாவின் பல கோடி சொத்துக்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஊடக அறிக்கையின்படி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள சசிகலாவின் சொத்துக்கள் மாநில நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு கூறி வருகிறது.
எனினும், இவை அனைத்தும் தங்களை பலவீனமாக்க ஆளும் கட்சி செய்து வரும் சதிகளின் ஒரு பங்கு என்கிறது அமமுக தரப்பு. சசிகலா தமிழகம் திரும்பியதால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் அதிமுக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எதையாவது செய்து அவர்களது மன உறுதியை அழிக்க முற்படுவதாகவும் அமமுக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜனவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் சசிகலா (Sasikala) பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னாள் AIADMK தலைவரான சசிகலா முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சசிகலா விடுதலையாகி உள்ளார்.
ஒரு வாரத்திற்கு சசிகலாவை யாரும் பார்க்க அனுமதி இல்லை
இதற்கிடையில், ஒரு செய்தி வெளியீட்டின்படி, சசிகலா சென்னையில் உள்ள தனது டி நகர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் ஒரு வாரத்திற்கு யாரையும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என ஆதரவாளர்களை வலியுறுத்தியுள்ளார். "நான் அன்பினால், தமிழ் நெறிமுறைகளுக்கும், நான் ஆரம்பித்த கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை ஒருபோதும் அடக்குமுறையால் அடிமைப்படுத்தப்பட முடியாது" என்று அவர் சென்னையில் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.
ALSO READ: தமிழக தேர்தல் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர்
சசிகலாவின் விடுதலை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு (TN Assembly Elections) முன்னதாக தமிழக அரசியலில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமை, பல சந்தர்ப்பங்களில், அவர் கட்சிக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. அவர் கட்சிக்குள் மீண்டும் வந்தால், அது அதிமுக-வில் இருக்கும் சமன்பாடுகளை சீர்குலைக்கும் என்றும், தேர்தலுக்கு முன்னர் அப்படிப்பட்ட ஒரு நிலை கட்சிக்கு ஆபத்தானதாக முடியும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, அதிமுக-வை மீட்டெடுப்பதே தங்களது முக்கியமான நோக்கம் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், டிடிவி தினகரனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளுமாறு சசிகலாவுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சசிகலா வருகையால் அதிமுக பதட்டம் அடைந்திருக்கிறது என்றும் பதவி ஆசையால் அக்கட்சி தலைவர்கள் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் என்றும் தினகரன் (TTV Dinakaran) தொடர்ச்சியான தனது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் பதவி படுத்தும் பாடு என்றும் ‘வாழ்க வசவாளர்கள்’ என்றும் அவர் மெலும் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) சுனில் அரோரா தற்போது தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரு மாநிலங்களிலும் இவ்வாண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தேர்தலுக்கான தேதிகள் பிப்ரவரி 15 க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR