சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 அன்று நடந்த தேர்தலின் போது சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வசித்து வந்த தலித் மக்கள் மீது சுமார் 120-க்கு மேற்ப்பட்ட ஆதிக்சாதிக் கும்பல் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள். 100-க்கு மேற்ப்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதில் 20 வீடுகள் முழுவதும் நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த 15-க்கு மேற்ப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமாக இதுவரை 25-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து வழக்கு போடப்பட்டு உள்ளது. பலர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அரியலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வன்முறை சம்பவம் நடைபெற்ற பொன்பரப்பி கிராமத்தில் உள்ள வாக்குசாவடிக்கு மறுவாக்குபதிவு நடந்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் திருமாவளவன்.


இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, "அரியலூர் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை நடைபெறவில்லை. இரு தரப்பினருக்கு இடையே மட்டுமே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.